9 தேலி கா மந்திர்

மாமியார் மருமகள் கோவிலிலிருந்து நாங்கள் அடுத்ததாய் சென்றது “தேலி கா மந்திர்”.  ஹிந்தியில் “தேல்” என்றால் எண்ணெய்.  ”தேலி” என்றால் எண்ணெய் மொத்த வியாபாரி.  ஒரு எண்ணெய் மொத்த வியாபாரியின் பணத்தினை வைத்துக் கொண்டு கட்டப்பட்டதால் இந்த கோவிலுக்கு “தேலி கா மந்திர்” என்ற பெயர் ஏற்பட்டது என்று சொல்கிறது இங்கே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு.

பிரதிஹாரா வம்சத்தினைச் சேர்ந்த ராஜா மிஹிர போஜா அவர்களின் காலத்தில் கட்டப்பட்ட இக் கோவிலின் உயரம் 30 மீட்டர்.  குவாலியர் கோட்டையில் இருக்கும் கட்டிடங்களிலேயே மிக உயரமான கோவில் இது தான்.

கிழக்குப் பக்கத்தில் இருக்கும் படிக்கட்டுகள் வழியே உள்ளே சென்றால் உள்ளே கர்ப்பக்கிரகம், சுற்றுப்பிரகாரம் என இருக்கிறது.  இக்கோவிலின் சிறப்பு, இதன் கட்டமைப்பில் தென் இந்திய மற்றும் வட இந்திய பாணிகள் இரண்டுமே உபயோகப்பட்டு இருக்கிறது என்பது.  அத்தனை வருடங்களுக்கு முன்னரே இது சாத்தியமாகி இருக்கிறது என்று நினைக்கும் போது ஆச்சரியம்தான்.

கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் நிறைய சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது.  கட்டி பல நூற்றாண்டுகள் ஆனதாலும், ஒழுங்கான பராமரிப்பு இல்லாததாலும், பல சிற்பங்கள் சிதிலப்பட்டு கிடக்கிறது.

முதலில் விஷ்ணு பகவான் இருந்த கோவிலாகவும் பின்னாட்களில் சிவனுக்கெனவும் இருந்ததாக இங்கே குறிப்புகள் காணப்படுகின்றன.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோவிலின் வெளியே ஒரு நுழைவாயிலும், இரு சிறிய மண்டபங்களும் கட்டப்பட்டதாம். கோவில் மட்டுமல்லாது இங்கே இருக்கும் பூங்காவும் பராமரிக்கப்படாமல் இருக்கிறது.  நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இவ்விடத்தினை மேலும் கவனம் செலுத்தி பராமரித்தால் நல்லது.

இக் கோவிலின் அருகில் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந் சிங் அவர்களின் நினைவாய் கட்டப்பட்ட ஒரு குருத்வாராவும் இருக்கிறது.  நேரமின்மை காரணமாக அங்கே செல்ல இயலவில்லை. இப்போது புதியதாய் கட்டப்பட்டாலும், இந்த குருத்வாரா இருக்கும் இடத்தின் வாசலிலேயே முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய குருத்வாரா மேடை இப்போதும் இருக்கிறதாம்.

குவாலியர் கோட்டை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்ட ஔரங்கசீப் காலத்தில் இங்கே சிறை பிடிக்கப்பட்ட குரு கோவிந்த் சிங் சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார்.  பலரது முயற்சியின் காரணமாய் அவருக்கு விடுதலை வழங்கினாராம் ஔரங்கசீப்.  ஆனால் தன்னுடன் சிறையில் இருந்த சுமார் 52 ராஜாக்களையும் விடுதலை செய்தால்தான் தானும் வெளியேறுவேன் எனச் சொல்லி அவர்களையும் விடுவித்ததாய் சிலர் சொல்கிறார்கள்.  நடந்தது குரு கோவிந்த் சிங்கிற்கும், ஔரங்கசீப்பிற்குமே வெளிச்சம்.

அட மணி ஆகிவிட்டதே.  ஒலி-ஒளி காட்சி ஆரம்பித்து விடுமே.  வாருங்கள் அங்கு செல்வோம்.  நாங்கள் நேரம் அதிகமாகிவிடும் என்பதால் ஹிந்தி பாஷையிலே தான் பார்த்தோம்.  அதில் இருந்து சில விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். காத்திருங்கள்.

License

Feedback/Errata

Comments are closed.