17 ராஜா-ராணி குடைகள்

பகுதி-14-ல் ”பூங்கொத்துடன் வரவேற்பு” எனும் தலைப்பில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாநிலத்தில் இருக்கும் சத்ரி பற்றி சொல்லியிருந்தேன்.  முதல் நாள்  மாலை பெய்த மழையின் காரணமாய் அங்கு செல்ல இயலவில்லை. எப்படியும் சென்று விடுவது என முடிவு செய்து, “மாதவ் தேசிய பூங்கா” மற்றும் ”பதையா குண்ட்” [Bhadaiya Kund] ஆகியவைகளை பார்த்த பிறகு காலை உணவை முடித்துக்கொண்டு  10 மணிக்கு அங்கு செல்ல கிளம்பினோம்.

மஹாராஜா மாதோ ராவ் சிந்தியா மற்றும் மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்கள் இருவருக்குமான குடைகள் இவை.  ”சத்ரி” என்பது இவ்வுலகில் நல்ல விஷயங்களைச் செய்தவர்களுக்கான சமாதி்.  இந்த குடைகள் பொதுவாக போரில் வீர மரணம் எய்திய மராட்டிய மஹாராஜாக்களுக்காக கட்டப்பட்டு வந்தன.  சிந்தியா ராஜா-ராணிக்காகக் கட்டப்பட்டவையே இந்த மிக அழகிய குடைகள்.

இந்த இடத்தினை நிர்வாகம் செய்துவரும் அறக்கட்டளையின் திரு மோஹிதே அவர்கள் இந்த இடம் முழுதும் எங்களுடன் வந்து அதன் சிறப்பினை விளக்கிச் சொன்னார்.  அவர் சொன்ன நிறைய விஷயங்கள் அந்த இடத்தின் பெருமையை உணர்த்தியது.

 

மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்களின் அமர்ந்த நிலையில் உள்ள முழு உருவச் சிலை இருக்கிறது.  அந்த இடத்தின் எதிரே ஒரு பெரிய மண்டபம்.  அதில் தினமும் காலை நேரத்தில் பிரசங்கங்கள் நடைபெறுகின்றன.  மாலையில் வாத்திய இசையுடன் கூடிய பாடல்களை  இசைக்கிறார்கள்.

மஹாராணி மற்றும் மஹாராஜா அவர்களின் குடைகளின் உள்ளே இருக்கும் அரங்குகளில் நிறைய மின்விசிறிகள் இருக்கின்றன.  அவற்றின் இறக்கைகள் மரத்தினால் ஆனவை என்பது ஒரு சிறப்பு.  இன்னுமொரு சிறப்பு இந்த மின்விசிறிகள் ஏ.சி. டி.சி என்ற இரண்டிலும் இயங்கும் விதமாய் அமைந்துள்ளது.  இப்போதும் இயங்குகிறது என்று திரு மோஹிதே அவர்கள் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

இந்தக் குடைகளுக்கு நடுவே அழகாய் வடிவமைக்கப்பட்ட குளம் இருக்கிறது.  குளத்திற்கு நீர் பக்கத்தில் இருக்கும் ஆற்றிலிருந்து வருகிறது.  இந்தக் குடைகளைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள்  குளத்தில் நிறைய குப்பைகளைப் போட்டுச் சென்றிருக்கிறார்கள்.  திரு மோஹிதே அவர்கள் இதைப் பற்றி சொல்லும்போது தினமும் குளத்தினை சுத்தம் செய்தாலும், அடுத்து வருபவர்கள் போட்டு விடுகிறார்கள் என்று எங்களிடம் குறைபட்டார்.

இங்கே ”கதம்” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது.  125 வயதான இந்த மரம், 1996 வருடம் இந்திய அரசாங்கத்தினால் ”மஹாவ்ருக்‌ஷ் புரஸ்கார்” வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருக்கிறது.  இந்த மரத்தின் உயரம் 20.7 மீட்டர்.

குளத்தின் இரண்டு பக்கங்களிலும் இரு கோவில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.  ஒரு கோவிலில் கருப்பு நிற இராமரும், பக்கத்தில் சீதாதேவி மற்றும் இலக்குவனும் இருக்க, வெளியே கைகளை கூப்பியபடி ஹனுமனும் நின்று கொண்டு இருக்கிறார்.  மற்ற பக்கத்தில் இருக்கும் கோவிலில் புல்லாங்குழல் ஊதியபடி கருமை நிற கண்ணனும், ராதையும் இருக்கிறார்கள்.

குளத்தின் நடுவே இருக்கும் ஒரு மேடையில் சிவலிங்கமும் அதன் எதிரே ஸ்படிகத்தினால் ஆன ஒரு நந்தியும் இருக்கிறது.  சிவலிங்கத்தின் மேலே இயற்கையிலேயே பல விஷயங்கள் இருக்கின்றன.  சிவலிங்கத்தின் ஒரு பகுதியில் நந்தியின் உருவம் தெரிகிறது.  இன்னொரு பக்கத்தில் சிவனின் உடுக்கையும் தெரிகிறது.  எங்களுக்கு திரு மோஹிதே அவர்கள் சமய சார்பான பல விஷயங்களை விளக்கினார்.

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.  அவற்றினை அடுத்த பகுதியில் பார்ப்போம்…

License

Feedback/Errata

Comments are closed.