25

ஒலி-ஒளிக் காட்சி நடந்து கொண்டு இருக்கும்போதே கால்களில் ஏதோ ஊறுவது போன்ற ஒரு உணர்வு. கொசுவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கால்களை ஆட்டியபடியே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினோம்.  ஊர் முழுவதும் ஓரிரு விளக்குகள் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டு இருக்கின்றது.

உத்தேசமாய் இதுதான் பாதையென்று கருதி நடந்து வந்தோம்.  கோட்டையின் வாயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அதைத் தாண்டும்போது எங்கள் அனைவரின் மேல் திடீரென ஒரு பயங்கரத் தாக்குதல்.  அந்த விளக்கை நோக்கி ஆயிரக்கணக்கில் பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன.  அதன் வழியில் செல்லும் எங்கள் மேலெல்லாம் விமானத் தாக்குதல் தான்.  தட்டுத் தடுமாறியபடி வந்து எங்கள் வாகனங்களை அடைந்தோம்.

ஊர் முழுக்க ஒரே இருட்டடிப்பு.  நாங்கள் தங்கியிருந்த பேத்வா ரிட்ரீட் [Betwa Retreat] கூட இருட்டில் மூழ்கியிருக்கிறது.  ஆங்காங்கே மின்மினி பூச்சிகள் போல் சில வெளிச்சம் குறைவாய்த் தரும் விளக்குகள்.  இந்த ஊரில் இருக்கும் பழைய கட்டிடங்கள் போலவே இங்கே இருக்கும் இந்த பூச்சிகள் பிரச்சனையும் மிகவும் புராதானமான ஒன்றாம்.

அதனால் அங்கே மாலை ஆனாலே இப்படி விளக்குகளை அணைத்து விட்டு இரவு 09.00 மணி ஆகக் காத்திருக்கிறார்கள்.  அரசும் இந்த பூச்சித் தொல்லையைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை போல.  நாங்கள் தங்குமிடம் வந்து சேரும்போது 08.00 மணி தான் ஆகியிருந்தது.  அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு குழல் விளக்குகளைப் போட்டால் கூட கதவு இடுக்குகள் வழியே பூச்சிகள் வந்து விடும் என தங்குமிடத்தின் நிர்வாகி எச்சரிக்கவே ஒரு மணி நேரம் நிலவொளி இருந்த ஒரு பலகணியில் இருந்து பேத்வா நதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

அப்போது எங்களுக்கென ஒரு கிராமிய நடன நிகழ்ச்சி இப்போது நடைபெறும் என்று அந்த நிர்வாகி சொன்னார்.  இரண்டு வயதான ஆண்கள் பாட, 10-12 வயதுடைய இளம்பெண் பாடலுக்கேற்ப புந்தேலா நகரத்தில் ஆடப்படும் கிராமிய நடனமாடினார்.  நிலவொளியில் பாடலும் பாடலுக்கேற்ற நடனமும் மனதை மயக்கியது.  நடனமாடிய பெண் எங்களில் சிலரையும் கூட நடனமாட அழைத்தார்.  அரை மணி நேரம் பாடலையும், நடனத்தையும் பார்த்து ரசித்த பிறகு அந்த கிராமிய கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற பண உதவி செய்தபின் இரவு உணவு தயாராகிவிடவே உள்ளே சென்றோம்.

நிறைய மின்விளக்குகள் இருந்தாலும், மெழுகுவர்த்தி ஒளியில் சில பெரிய உணவகங்களில் உணவு பரிமாறுவார்கள்.  அதுபோல் இங்கேயும் மின்விளக்குகள் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை.  மங்கிய ஒளியில், அதுவும் வாயின் உள்ளே செல்வது உணவா, பூச்சியா என்று தெரியாத நிலையில் இரண்டொரு சப்பாத்தியை விடுவிடுவென உள்ளே தள்ளிவிட்டு எழுந்தோம்.

ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டபடியால் இனி பூச்சிகள் தொல்லையிராது, நீங்கள் சென்று உங்கள் அறைகளில் ஓய்வெடுங்கள் நாளை காலை சீக்கிரம் கிளம்பலாம் என்று பயணம் ஏற்பாடு செய்த பட்நாகர் சொன்னார்.  நானும் என்னுடன் இந்த முழு பயணத்திலும் என்னறையில் தங்கிய கேரள நண்பர் பிரமோதும் அறைக்குச் சென்றோம்.  நாங்கள் அறையை விட்டு அகலும்போது எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுச் சென்றதால் ஓரிரு பூச்சிகள் தான் குளியலறையில் இருந்தது.  அவற்றை தண்ணீர் விட்டு ஜலசமாதி செய்தோம்.

மறுநாள் காலை எழுந்தபோது தான் தெரிந்தது மற்ற அறைகளில் நடந்த கூத்துகள்.  அவர்கள் அறைகளில் விளக்குகளை அணைக்காமல் விட்டுவிட்டதால் அறை முழுக்க ஆயிரக்கணக்கில் பூச்சிகள்… தரை, படுக்கை, நாற்காலிகள், குளியலறை என்று எங்கெங்கு காணினும் பூச்சியடா!  இரவு முழுவதும் எல்லாவற்றையும் பெருக்கி, ஒரு மூலையில் குவித்து மொத்தமாய் ஹிட் அடித்து மயக்கமடையச் செய்து வாரி வெளியில் கொட்டியிருக்கிறார்கள்.  மொத்த அறையையும் De-bug செய்து முடிக்கவே இரவு இரண்டு மணி ஆகிவிட்டதாம்.

வெளியே ஒவ்வொரு விளக்குக் கம்பத்தின் கீழும் ஆயிரக்கணக்கில் செத்துக் கிடந்த பூச்சிகள்.  மேலும்  பூமியில் ஆங்காங்கே இருக்கும் சிறு துவாரங்களில் நிறைய பூச்சிகள் உயிருடன்…

நாங்களும், இன்னும் இரு நண்பர்களும் சீக்கிரமாகவே எழுந்து விட்டபடியால் தயாராகி வெளியே நகர்வலம் செய்து அப்படியே இங்கிருக்கும் சத்ரிகளைப் பார்க்கச் சென்றோம்.  அவை பற்றி அடுத்த பகுதியில்…..

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book