19

இப்போதெல்லாம் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்களும், மருந்துகளும் நமக்கு கடைகளில் கிடைக்கின்றன. இவையெல்லாம் எப்படி தயாரிக்கப்படுகின்றன, இவற்றுக்கு என்ன மூலப் பொருள் என்று என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா நாம்? இதற்கான உங்களின் பதில்”நிச்சயமாக இல்லை” என்பதாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் நிறைய Herbal Products வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுகிறது.   இப்படி வெளிநாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் Herbal Products வாங்குபவர்கள் நம்மில் எத்தனை எத்தனை பேர்!  இவற்றுக்கெல்லாம் மூலப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?

நம் நாட்டில் நிறைய மூலப் பொருட்களை தயார் செய்து அவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.  அந்த மூலப் பொருட்களைக் கொண்டு  பொருட்கள் தயாரித்து அவற்றினை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்கிறார்கள்.  அதை நாமும் வாங்கி “என்ன இருந்தாலும் வெளி நாட்டுக் காரன் வெளிநாட்டுக்காரன் தான்!  அவன் திறமையே திறமை” என்று மெச்சிக் கொள்கிறோம்.

ஷிவ்புரி மாநிலத்தில் இப்படி மூலிகைகளிலிருந்து, மரங்களின் பட்டைகளிலிருந்து, பூக்களில் இருந்து என்று  இயற்கையாக நம் வனங்களில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்களை எடுத்து சுத்தப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிற்சாலையினை நாங்கள் பார்வையிட்டோம்.

இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பொருட்களை எடுத்து அவற்றினை எப்படி பதப்படுத்துகின்றனர், அதில் என்னென்ன விஞ்ஞான முறையில் கலந்து பொடிகள் செய்கிறார்கள் என்பதையெல்லாம் எங்களால் பார்க்க முடிந்தது.  நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் நிறைய மூலிகைப் பொருட்கள் தயார் செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இவர்களின் தயாரிப்பு பல மருந்துகளின், அழகுப் பொருட்களின் மூலப் பொருள்.  அஷ்வகந்தா, இஞ்சி, சீயக்காய், மேத்தி இன்னும் பலப்பல மூலிகை மரங்கள்/செடிகளின் வேர்கள், பழங்கள், மரப்பட்டைகள், இலைகள் என்று எல்லாவற்றிலிருந்தும் மருந்து செய்வதற்கான பொருட்களை பிரித்தெடுத்து, அவற்றை பொடியாக்குகிறார்கள்.

அவற்றையெல்லாம் பார்த்த போது “இந்தியாவில் இத்தனை வளங்கள் இருக்கும் போது அவற்றை வைத்து மருந்துகளை நாமே தயாரிக்கலாமே, ஏன் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும்.  பிறகு அவர்களிடமிருந்து வாங்கவேண்டும்” என்று எனக்கு மனதில் தோன்றியது.  அதற்கு பதிலும் உடனே தோன்றியது.

நமக்கு என்றுமே வெளிநாட்டுப் பொருட்கள் மீது மோகம் அதிகம்.  ஒரு பொருள் நம் நாட்டிலேயே தயாரித்து கிடைத்தாலும் அது வெளிநாட்டில் தயாரித்தது என்றாலோ, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றாலோ தான் அதற்கு என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்குகிறோம்.

தொழிற்சாலையின் உள்ளே ஆங்காங்கே உள்ள பூச்செடிகளிலிருந்தும், இயற்கையான மூலிகைகளின் ஒருசேரக் கலந்திருக்கும் வாசமும் அங்கிருந்த மரங்களின் தயவால் காற்றின் மூலம் நாசியை வந்தடைகிறது.

இந்த எண்ணங்களுடனே அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்து எங்களுடைய அடுத்த இலக்கான ”ஓர்ச்சா” எனும் இடத்திற்கு வந்தோம்.  ஓர்ச்சா எனும் மிகவும் பழமையான நகரம், அங்கிருக்கும் கோட்டைகள், ராம்ராஜா கோவில், வித்தியாசமான ஒரு படையெடுப்பு போன்ற விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் நாம் காண இருக்கிறோம்.  காத்திருங்கள்….

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book