20

மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் [Tikamgarh] மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. ஹிந்தியில் ஓர்ச்சா என்றால் ”மறைந்துள்ள” என்று அர்த்தம்.  இந்த ஊர் “பேத்வா” [Betwa] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

புந்தேலா [Bundela] ராஜாக்களின் தலைநகராகத் திகழ்ந்த ஒரு இடம் தான் இது.  Bundelkhand என்று மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளைச் சேர்த்து தனி மாநிலம் கேட்கிறார்களே அதற்கெல்லாம் முன்னோடி நகரம் தான் இது.  1501-ஆம் வருடம் புந்தேலா ராஜாவான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் இது.

இந்த நகரத்தில் பலப்பல பழமையான கட்டிடங்கள் இருக்கின்றன.  அரண்மனைகள், கோவில்கள், சத்ரி [இறந்த ராஜா-ராணிகளுக்கென கட்டப்பட்ட சமாதிகள்], மற்றும் நாட்டியமாடும் ஒரு கவிதாயினிக்கு என கட்டப்பட்ட ”ராய் ப்ரவீன் மஹால்” என ஊர் முழுவதும் புராதனமான கட்டிடங்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு கட்டிடத்திலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன.

நாங்கள் சென்ற அன்று முதலில் பார்த்த இடம் ”ஷீஷ் மஹால்”.  இந்த இடம் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ராஜா ”உதைத் சிங்” அவர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட எழில் மிகு கட்டிடம்.  ஆனால் இப்போது அந்த கட்டிடத்தின் பல புராதனச் சின்னங்கள் அழிந்து போய் விட்டது.  மிச்சம் இருக்கும் இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடம்/உணவகம் இருக்கிறது.  நாங்கள் அனைவரும் அங்கு சென்று அறைகளையும், மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்தோம்.

இந்த மஹால், ராஜ் மஹால் மற்றும் ஜெஹாங்கீர் மஹால் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கிறது.  இந்த இடங்களுக்கெல்லாம் செல்லலாம் என்று நினைத்தால் அது முழுவதற்கும் இன்று நேரம் இருக்காது, நாளை செல்லலாம் என்று எங்களுடன் வந்த ரோஹித் பட்நாகர் அவர்கள் சொல்லவே இன்றைய பொழுதின் அடுத்த நிகழ்ச்சி என்ன என்று கேட்டோம்.

மாலை 07.00 மணிக்கு ஒலி-ஒளி மூலம் இந்த ஓர்ச்சா நகரத்தின் பழமையை விளக்கிச் சொல்லும் காட்சி இருக்கிறது என்று சொல்லி, அது வரை பக்கத்தில் இருக்கும் ராம் ராஜா மந்திர் சென்று பார்த்து விட்டு, அப்படியே அந்த ஊரின் முக்கிய கடை வீதியைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னார்.

கடை வீதி என்று சொன்னவுடன் ஏதோ பெரிய கடை வீதி, நிறைய கடைகள் இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம்.  இப்போது இந்த புந்தேலா தலைநகரத்தில் இருப்பது இந்த கட்டிடங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.  சில கடைகள் இருக்கின்றன.  ஜான்சியிலிருந்து கஜுராஹோ செல்லும் வழியில் இந்த இடம் இருப்பதால் நிறைய வெளிநாட்டவர்களைப் பார்க்க முடிகிறது.  அதனால் இங்கு விற்கும் பொருட்களின் விலையும் டாலரின் அளவிற்குத் தான் இருக்கிறது.

அப்படியே நடந்து சென்ற போது இந்த இடத்தின் பின்னடைவு கண் கூடாகத் தெரிந்தது.  மொத்த ஊரின் மக்கள் தொகையே இருபதாயிரத்திற்கு மேல் இருக்காது.   இருக்கும் எல்லா மக்களும் சுற்றுலா வரும் பயணிகளை நம்பியே இருக்கிறார்கள்.  எங்களுடன் வந்த வண்டி ஓட்டுனர் திரு ராஜு அவர்களின் ஊராம் இது.

ஊர் பற்றிய நிறைய விஷயங்களை வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார்.  இருக்கும் சிலரும் ஜான்சி, குவாலியர் போன்ற அடுத்த நகரங்களை நோக்கிச் சென்று விட்டதாகவும் சொன்னார்.  ராம் ராஜா மந்திர் சிறப்பு பற்றியும் சொன்னார்.  சரி கோவிலையும் பார்த்து விடலாம் என்று சென்றபோது கோவில் மூடியிருந்தது.  இரவு 08.30 மணிக்கு தான் திறப்பார்கள் என்று சொல்லவே அப்படியே நடந்து விட்டு திரும்பினோம்.

07.00 மணிக்கு நாங்கள் கண்ட ஒலியும்-ஒளியும் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகிர்வில் சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book