15

இரவு முழுவதும் கனவில் “ஓ மானே மானே…” என்று ஒரே மான்கள் கூட்டம் தான்.  அதனால் ஆர்வமுடன் மாதவ் தேசிய பூங்கா செல்ல அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து தயாரானோம்.  ஆக்ரா-மும்பை மற்றும் ஜான்சி-ஷிவ்புரி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த பூங்காவின் மொத்த பரப்பளவு 156 சதுர கிலோமீட்டர்.  எங்களது வண்டிகளில் இரண்டும், மத்தியப்பிரதேச சுற்றுலா துறையின் ஒரு திறந்த ஜீப்பிலுமாக  பயணத்தைத்  தொடங்கினோம்.

வருடத்தின் எல்லா நாட்களும் திறந்திருக்கும் இப்பூங்காவில் நிறைய விலங்குகள் இருக்கின்றனவாம்.  பூங்காவின் நுழைவாயிலில் இருக்கும் தகவல் மையத்தில் செல்லும் நபர்கள் எண்ணிக்கை, வண்டி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதனுள் செல்வதற்கான நுழைவுச்சீட்டு வாங்கிய பிறகு வன இலாகா ஊழியர் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

உள்ளே நுழைந்து மெதுவாக பயணத்தினைத் தொடங்கினோம்.  வேகமாகவோ, ஒலி எழுப்பியபடியோ சென்றால் விலங்குகள், பறவைகளைப்  பார்க்க முடியாது என்பதால் மெதுவாகவே வண்டிகள் நகர்ந்தன.  வன இலாகா ஊழியர் மூவாயிரத்திற்கும் அதிகமான மான்கள், எண்ணிலடங்கா மயில்கள், காட்டுப் பன்றிகள், பறவைகள், ஒரு புலி, நீல்காய் என்று அழைக்கபடும் மானினம் என பல விலங்குகள் இருப்பதாய் சொன்னார்.

சுத்தமான காற்று, பாழ்படுத்தப்படாத இயற்கைச் சூழல் என்று அதிகாலையில் நன்கு அனுபவிக்க முடிந்தது எங்களால்.  தில்லியின் மாசுபட்ட காற்றினை சுவாசித்த எனக்கு இது மிகவும் புத்துணர்வு ஊட்டுவதாய் அமைந்தது. பூங்காவில் நுழைந்து பயணித்த சில நிமிடங்களிலேயே நாங்கள் பார்த்தது 1919-ஆம் வருடம் கட்டப்பட்ட Sakhya Sagar Sailing Club.

இந்த கட்டிடம் குவாலியர் மஹாராஜா அவர்களால் முக்கிய புள்ளிகள் தங்குவதற்காக கட்டியது.  கட்டிடத்தின் பாதி சாக்யா ஆற்றினுள் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் இருந்து ஆற்றின் முழு அழகையும், பல்வேறு பறவைகள், ஆற்றில் இருக்கும் முதலைகள் போன்றவற்றையும் காண முடிகிறது.

அங்கிருந்து கிளம்பி வனத்தினுள் செல்லும் போது வழியில் பார்த்தது “ஷூட்டிங் பாக்ஸ்”.  1936-ஆம் வருடம் சாக்யா சாகர் ஆற்றில் கட்டியிருக்கும் அணையின் மீது கட்டப்பட்டது இந்த அறை.  இங்கிருந்தபடியே வனத்தில் இருக்கும் புலிகளைக் கொல்வார்களாம்… என்னே அவர்களது வீரம்!  புலிகளைக் கொல்வது தவிர இங்கிருந்தபடியே பறவைகள், அணைக்கட்டின் கற்களில் வந்து படுத்திருக்கும் முதலைகள் ஆகியவற்றைக் கண்டு களிப்பார்களாம் அரசர் மற்றும் அவரது பரிவாரங்கள்.

வனத்தினுள் அடுத்து வருவது George Castle.  இதன் பின்னும் ஒரு கதை இருக்கிறது. ஜிவாஜி ராவ் சிந்தியா அவர்களால் 1911 –ஆம் வருடம் கட்டப்பட்டது இக்கட்டிடம். ஆங்கிலேய அரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்த வழியே புலி வேட்டைக்காக வரும்போது ஒரு இரவு தங்குவதற்காகக் கட்டப்பட்டதாம் இந்த இடம்.  இதில் வேதனை என்னவென்றால் அரசர் வரும் வழியிலியே புலியைக் கொன்று விட்டதால் இங்கு வரக்கூட இல்லை. இந்தக் கட்டிடத்தில் தரையில் இத்தாலியிலிருந்து தருவிக்கப்பட்ட சிறிய கற்கள் [tiles] பதிக்கப்பட்டுள்ளன.  பல லட்சங்கள் செலவு செய்து கட்டப்பட்ட இக் கட்டிடத்தில் இப்போது யாரும் வசிப்பதில்லை என்று சொல்வதற்கில்லை.  நிறைய வௌவால்களும், அவ்வப்போது விலங்குகளும் வந்து தங்குகிறதாம்.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் சுத்தமான காற்றையும் இயற்கைச் சூழலையும் பார்த்து ரசித்தோம்.  எங்களது மொத்த பயணத்தின் போது நாங்கள் நிறைய மான்களையும், மயில்களையும் பார்க்க முடிந்தது.  ஒரு சில பறவைகள், ஒரு காட்டுப் பன்றி, சில லங்கூர் வகை குரங்குகள் ஆகியவையும் கண்ணுக்கு புலப்பட்டன.

மொத்தத்தில் ஒரு சுகானுபவம் அது.  இருக்கும் ஒரு புலியையும் காண முடியவில்லை என சிலருக்கு வருத்தம்.  இந்தப்  புலி வருகிறது என்று தெரிந்ததும் அந்தப் புலி ஓடி ஒளிந்து விட்டது என்று சொல்ல முடியாமல் என் தன்னடக்கம் தடுத்து விட்டது!

அடுத்ததாய் நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே இருக்கும் “பதையா குண்ட்” என்ற இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்…

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book