இலக்கியங்கள் இனிதாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, கவிதை, கதை, கட்டுரை போன்ற இலக்கியப் படைப்புகளிலுள்ள, அதைப் படைத்தவரின் முத்தான வார்த்தைகளைத் தாங்கிய வரிகள், அதை வாசிப்பவரைத் தம் சிறகிலேற்றி, அப்படைப்பாளி கண்ட காட்சிகளைக் காண்பித்து, கொண்ட மகிழ்வினைக் கொள்ளச் செய்து, அவர் மூழ்கிய இன்ப வெள்ளத்தில் வாசிப்பவரையும் மூழ்க வைக்கும் என்பதுதான் உண்மை. அப்படியிருக்கையில், இலக்கியப்படைப்பே ஒரு பயணக் கட்டுரையானால் எப்படி இருக்கும்?!

கண்ணுக்கு விருந்தாகும் காட்சிகள் ஒவ்வொன்றையும் கண்ணால் காணாமலேயே மனக்கண்ணில் காணக்கூடிய வாய்ப்பை அல்லவா நாம் கிடைக்கப் பெறுவோம்!  அத்தகைய பயணங்களை மேற்கொள்பவரும், அதை எழுதுபவரும் நம் வெங்கட்ஜியானால், வாசிப்பவர்கள் எல்லாவிதத்திலும் கொடுத்து வைத்தவர்கள் என்றுதானே சொல்லவேண்டும்! எனவே, இதை வாசிக்கத் தீர்மானித்த நீங்கள் கொடுத்து வைத்தவரே.

தான் கண்ட காட்சிகளைக் கச்சிதமாக விவரிக்கும் திறனும், காதில் கேட்பவைகளில் எல்லோரும் அறிய வேண்டியதை மட்டும் அளவாக, அழகாகச் சொல்லும் திறனும், இடையிடையே தேவையான இடத்தில், தேவையான அளவில் தன் கருத்துகளையும், எண்ணங்களையும், தன்னகத்தே மலரும் நினைவுகளையும் சேர்த்துத் தன் படைப்புகளை அழகுபடுத்தும் திறனும் வாய்ந்தவர் நம் வெங்கட்ஜி. இயற்கையைப் பூசிக்கும் பூசாரி ஆகிய ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.  “The spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion Recollected in Tranquility”.   “Nature teaches everything to us.  Nature watches us every time”. இயற்கை நமக்கு எல்லாமே கற்றுத் தருகிறது”.

வெங்கட்ஜி அவர்களின் எழுத்துகள் வசீகரமானவை. மிக எளிதான நடையில் சொல்லிச் செல்வது மிக மிகச் சிறப்பான ஒன்று. பயணக் கட்டுரைகளின் இடையே சிறிது நகைச்சுவையும் விரவி வருவது மேலும் சுவையூட்டுவதாகவே இருக்கின்றது. “ஜன்னல் வழியே கிருஷ்ணர் தெரிகிறாரா என்று பார்த்தேன். அவரைக் காணவில்லை.  கோபியர்களுடன் மார்னிங் வாக்” சென்று விட்டார் போல.” “ஆக்ரா என்றால் கொஞ்சம் உதறல்.  பல முறை தாஜ்மஹால் சென்றதுண்டு. ஷாஜஹான் கூட இத்தனை முறை பார்க்க வந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு மும்தாஜ் கூடவே வந்து விட்டால்?!!” என்பன சில உதாரணங்களே.

 

அவர் சில வருடங்களுக்கு முன், அலுவலகத்தில் இரண்டு மாத பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, பயிற்சியின் ஒரு பகுதியாகத் தன் அலுவலக நண்பர்களுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட 4 நாள் பயணத்தில் கண்ட காட்சிகளைத் தன் வலைத்தளத்தில் 27 இடுகைகளாக வெளியிட்டிருந்தார். இதோ இப்போது அவற்றைத் தொகுத்து ஒரு மின் புத்தகமாக வெளியிட்டும்விட்டார். நேரத்தை வீணாக்காமல், பயணத்தின் அடுத்த பகுதியை வாசிக்க, அடுத்த இடுகை வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே ஒரே மூச்சாக அவரது நான்கு நாள் பயணத்தை நாமும் பயணித்து முடித்து, நம் மனதில் சேமித்து வைக்கக் கிடைத்த அரிய வாய்ப்பிது.

இப்பயணக் கட்டுரை வாசிக்கையில், “சில சமயங்களில் பயணம் ஆழமான அன்பையும், நேசத்தையும் கூட புரிய வைக்கிறது.  பல புதிய நட்புகளை உருவாக்குகிறது. புதிய மனிதர்களை நேசிக்க வைக்கிறது.  இந்த உலகம் மிகவும் பரந்தது, அதில் எண்ணற்ற ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன” என்பதை உணர வைக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணமாக, “ரோஷ்ணி”யில் -“REHABILITATION OPPORTUNITIES SERVICE & HEALTH FOR THE NEUROLOGICAL IMPAIRED”- நாமும் வெங்கட்ஜி சந்தித்த அதுலையும், சேதனையும் காண்கிறோம்.

இந்தக் கட்டுரையில் பல இடங்களைப் பற்றிய குறிப்புகளை மிக அருமையாகச் சொல்லிச் செல்கின்றார். இடங்களின் வரலாறுகளைக் கூட நினைவில் வைத்துக் கொண்டு அவர் அனாயாசமாகச் சொல்லுவது மிக மிக வியப்பாக இருக்கின்றது. நுணுக்கமான தகவல்களைத் தருவதில் வல்லவராகவும் இருக்கின்றார்.

தான்சேனின் சமாதிக்கருகே பூத்துக் குலுங்கும் ரோஜாக்களையும் காண்கிறோம். இலைகள் தினம் தினம் பறி போய்கொண்டிருக்கும் புளியஞ்செடியைக் கண்டு வருந்துகிறோம். ஜெயவிலாஸ் அரண்மனை சாப்பாட்டு மேசையில் இயங்கும் வெள்ளி ரயிலைக் கண்டு நாமும் வியக்கிறோம். 7 டன் எடையுள்ள 248 மெழுகுவர்த்திகளை ஏற்ற முடிகின்ற அலங்கார விளக்கைக் கண்டு அதிசயிக்கிறோம்.

அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும், வேட்டையாடப்பட்டுப் பதப்படுத்திய புலிகளைக் கண்டவர், “புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனப் புலம்பி என்ன பயன்?  அந்தக் காலத்திலேயே இது போன்ற ராஜாக்களும், வெள்ளைக் காரர்களும் நமது நாட்டின் சொத்தை மட்டும் அடித்துக் கொள்ளவில்லை.  நமது வனங்களின் செல்வத்தினையும் அல்லவா அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.”  என்று பதிந்த அவரது ஆதங்கம் நம்மையும் தொற்றிக் கொள்கின்றது.

 

குவாலியர் சிறைக் கைதிகள் நெய்த, தர்பார் ஹாலில் விரிக்கப்பட்டிருக்கும், ஆசியக்கண்டத்திலேயே மிகப் பெரிய கம்பளத்தைக் கண்டு வியக்கிறோம். குவாலியர் கோட்டையில் காணும் கல்லாலான திரைச் சீலையைக் கண்டு அதிசயக்கிறோம். குவாலியர் கோட்டையில் காண்பிக்கப்படும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியைக் கேட்பதோடு மட்டுமல்ல, குவாலியரின் பெயருக்குக் காரணமான குவாலிபா முனிவரின் குரலையும் கேட்கிறோம்.  மாமியார் மருமகள் கோயில் என்பதை வாசித்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  அதை நீங்களும் வாசித்து வியப்பீர்கள்.

தாஜ்மகால் போல் அங்குள்ள குஜ்ரி மகால் எழுப்பப்படக் காரணமான அந்த மான்விழியாளை நாமும் நம் மனக்கண்ணில் காண்கிறோம். “டிக்ரா” அணையில் படகு சவாரி செய்கிறோம்.  மாதவ் தேசிய பூங்காவில் திறந்த ஜீப்பில் பயணித்து மான் கூட்டங்களையும், மயில்களையும் காண்கிறோம். “பதையா குண்ட்” சிவலிங்க தரிசனம் செய்கிறோம்.

இந்திய அரசாங்கத்தால் மஹாவிருக்ஷ் புரஸ்கார் பெற்ற, “கதம்” மரத்தைப் பார்க்கிறோம். மூலிகைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் குவித்து இடப்பட்டிருக்கும் அஸ்வகந்தா, இஞ்சி, சீயக்காய், மேத்தி போன்றவற்றைக் கண்டு வியக்கிறோம். ஓர்ச்சாவிலுள்ள ராமராஜா மந்திரைத் தரிசிக்கிறோம்.  ஜான்சியில் பெல் யூனிட்டில் தயாரிக்கப்படும் ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்களையும் கண்டபின்  வெங்கட்ஜியுடன் ரயிலேறி அவர் புதுதில்லிக்கும், நாம் நம் வீட்டிற்கும் பயணிக்கிறோம்.

வெங்கட்ஜியின் செலவில் நான்கு நாள் இலவசமாக மத்தியப்பிரதேசத்தில் பயணித்ததற்குக் கண்டிப்பாக திருமிகு வெங்கட்நாகராஜ் (வெங்கட்ஜி) அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை, இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நினைப்பார்கள் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

மற்றவர்கள் பார்க்காத பார்வையில் பார்த்து எழுதுவது இவரது தனிச் சிறப்பு. ஒருவேளை அவருக்குப் புகைப்படக் கலையில் ஆர்வம் இருப்பதால் காமெரா கண்கள் வழி பார்ப்பது போல் பார்ப்பதாலும் இருக்கலாம். அதனால்தானோ என்னவோ இவர் தரும் குறிப்புகள் மட்டுமின்றி, பயணம் செய்யும் போது எடுக்கும் புகைப்படங்களும் பல வித்தியாசமாக, மிக மிக அருமையாகக் கண்ணிற்கு விருந்தளிப்பவையாக இருக்கின்றன. இவரது பயணக்குறிப்புகள் நாம் பயணம் மேற்கொள்ள உதவியாகவும் இருக்கின்றன என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு நல்ல யாத்ரீகன் தனது பயணத்தைக் குறித்துப் பல அனுபவப் பாடங்களையும், தனது பார்வையையும், கருத்துக்களையும் பயணக் கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் தவறுவதில்லை என்பதை திருமிகு வெங்கட் நாகராஜ் நிரூபித்துள்ளார். நிரூபித்தும் வருகின்றார் தனது வலைத்தளத்தில் www.venkatnagaraj.blogspot.com. வாசித்துப் பாருங்கள்.  நீங்களும் எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள்! வெங்கட்ஜியுடன் அவரது கட்டுரை வழி பயணம் செய்யப்போகும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.

 

துளசிதரன்/கீதா

http://thillaiakathuchronicles.blogspot.in/

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book